போலி வழக்கின் மூலம் சிறையில் அடைத்ததால், மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை இழந்ததற்காக மாநில அரசிடம் இழப்பீடு கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிறைவாசம் தனது குடும்பத்தை பட்டினியின் விளிம்பிற்கு அனுப்பியதால், தனக்கு ஏற்பட்ட துன்பம் மற்றும் மன வேதனையை, பாலியல் இன்பத்தை இழந்தமை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் மாநில அரசிடம் 10,006.02 கோடி ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.
இதில் பாலியல் இன்பத்தை இழந்தமைக்காக 2 இலட்சம் ரூபா இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால் ( வயது 35). இவரும், கூட்டாளியும் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்தார்.
2018 ஜனவரி 18ஆம் திகதி அந்த பெண் அளித்த புகாரில், எனது சகோதரின் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்று கூறி பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் என்னை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற கந்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் கந்து தனது கூட்டாளி பர்னு அம்லியரை அழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார்.
எனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பர்னு என்னை இந்தூர் அழைத்து சென்றார். அங்கு வைத்து பர்னுவும் தன்னை 6 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று அப்பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 2018 ஜூலை 20ஆம் திகதி வழக்குப்பதிவு செய்த பொலிசார், தலைமறைவாக இருந்த கந்துவை 2020 டிசம்பர் 23ஆம் திகதி கைது செய்தனர். அவரது கூட்டாளியையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்லம் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள கந்து மற்றும் அவரது கூட்டாளி பர்னு அம்லியர் மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை.
இதனால், 666 நாட்கள் சிறைக்கு பின் கந்து மற்றும் அவரது கூட்டாளி விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டு 666 நாட்கள் (சுமார் 2 ஆண்டுகள்) சிறை தண்டனை அனுபவித்ததாகவும் தனக்கு மத்தியபிரதேச அரசு 10006.02 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கந்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் இருந்த 2 ஆண்டுகளில் நான் எதிர்கொண்ட துன்பங்களை விவரிக்க முடியாது. எனது குடும்பம் உள்ளாடை வாங்கக்கூட இயலாத நிலையில் உள்ளது. எனது தாய், மனைவி, இரண்டு பிள்ளைகள் உணவில்லாமல் சிரமப்பட்டனர்.
வெப்பம், குளிருடன் சிறையில் உடை இல்லாமல் நான் மிகுந்த கொடுமையை சந்தித்தேன். சிறையில் நான் சந்தித்த சோதனைகளால் சிறையில் இருந்து வெளியே வந்தபின்னும் தோள் தொடர்பான நோய், நிரந்தர தலைவலி உள்பட பல நோய்களை சந்தித்தேன். 6 பேர் கொண்ட குடும்பத்தில் நான் தான் பணம் ஈட்டுபவன். என் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். கடவுளின் ஆசிர்வாதத்தால் நான் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என்றார்.
மனித உயிர் விலைமதிப்பற்றது என்ற அடிப்படிடையில், ரூ.10,000 கோடி கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. போலி குற்றச்சாட்டுகளால் என் வாழ்க்கை பாழாகிவிட்டது. தொழில் மற்றும் வேலை இழப்பு, நற்பெயர் இழப்பு, உடல் மற்றும் மனம் சார்ந்த வலி, குடும்ப வாழ்க்கை இழப்பு, கல்வி வாய்ப்பு இழப்பு, வாழ்க்கையில் முன்னேற்றம் இழப்பு ஆகிய 6 காரணங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
மேலும், போலி வழக்கால் 666 நாட்கள் சிறை சென்றதால் ‘மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் இழந்ததற்காக’ மத்திய பிரதேச அரசு எனக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.