யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் பதவிவிலகல் கடிதத்தை ஆளுனர் ஏற்றுக்கொள்ளாமல் விட்டால், மீண்டும் முதல்வர் பதவியை தொடர்வது பற்றி பரிசீலிக்க தயாராக உள்ளதாக மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (5) வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
யாழ் மாநகரசபை குழப்பங்களையடுத்து, கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய, இன்று ஆளுனர் செயலகத்திற்கு யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இன்றைய சந்திப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி என்பன செல்லவில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் ஆளுனர் அலுவலகத்திற்கு வந்து தமது நிலைப்பாட்டு கடிதத்தை வழங்கி விட்டு சென்றுவிட்டனர்.
மணிவண்ணன் தரப்பு, ஐ.தே.க, சு.க, தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய தரப்புக்கள் சந்திப்பிற்கு சென்றிருந்தனர்.
ஆளுனரின் செயலாளர் சந்திப்பை மேற்கொண்டார்.
தமது தரப்பில் 3 விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.
1.உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் யாழ் மாநகரசபைக்கு புதிய முதல்வர் தெரிவு மேற்கொள்ளப்பட முடியாது. அப்படி நடந்தால், அந்த நடவடிக்கையை எதிர்ப்போம்.
2.யாழ் மாநகரசபையை வடக்கு ஆளுனர் தனக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் கலைக்கலாம்.
3.தற்போதைய சபை தொடர வேண்டுமென ஆளுனர் விரும்பினால், வி.மணிவண்ணனால் அனுப்பப்பட்ட பதவிவிலகல் கடிதத்தை ஏற்கவில்லை, 14 நாட்களிற்குள் புதிய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து நிறைவேற்றுங்கள் என ஆளுனர் தெரிவித்தால், மீண்டும் பதவியை தொடர்வது பற்றி சாதகமாக பரிசீலிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.