வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகத்திற்கு மாற்றாக பிறிதொரு நிர்வாகத்தை தெரிவு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம் தடை கட்டாணை பிறப்பித்துள்ளது.
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தில் நீண்டகாலமாக செயற்பட்ட நிர்வாகத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, கழகத்தினால் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
கரவெட்டி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தரிற்கு அறிவித்து, அவரது அறிவுறுத்தலின் படி நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதில் கரவெட்டி பிரதேச செயலாளர் தயக்கம் காட்டியதுடன், அதை கலைத்து புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய முயற்சிப்பதாக கழக நிர்வாகம் குற்றம்சாட்டியது.
அதை தொடர்ந்து, புதிய கழக நிர்வாகத்திற்கு வடமாகாண விளையாட்டு திணைக்களம் அங்கீகாரமளித்திருந்தது.
இந்த சூழலில் புதிய நிர்வாகத்தின் செயலாளருக்கு பதிலாக புதிய செயலாளர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனினும், பழைய செயலாளர் கழக செயற்பாட்டிற்கு இடையூறாக செயற்படுவதாக கழகத்தினரால் குற்றம்சுமத்தப்பட்டது.
இந்த பின்னணியில் நாளை (5) புதிய நிர்வாக தெரிவு இடம்பெறும் என பதவியில் இல்லாத செயலாளர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
இது தொடர்பில், தற்போதுள்ள நிர்வாகத்தினர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். பொலிசார் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்த போதும் பலனளிக்கவில்லை.
கரவெட்டி பிரதேச செயலாளரே தன்னை செயலாளராக செயற்படும்படி அனுமதியளித்ததாக, பழைய செயலாளர் எழுத்துமூல ஆவணத்தை பொலிசாரிடம் காண்பித்திருந்தார்.
இதையடுத்து, வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகத்தினர், நடைமுறையில் உள்ள நிர்வாகத்தினை தவிர்த்து புதிய நிர்வாக தெரிவிற்கு அதிகாரம் அற்றவர்களின் முயற்சிக்கு எதிராக பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று (3) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாளை நடக்கவிருந்த புதிய நிர்வாக தெரிவிற்கு தடை கட்டாணை பிறப்பிக்கட்டது.