25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
விளையாட்டு

IND vs SL: மீண்டும் வெளிப்பட்ட இலங்கையின் பினிஷிங் பலவீனம்; இந்தியா த்ரில் வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மும்பை நகரின் வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இலங்கை 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 37 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். கப்டன் பாண்டியா 29 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ஓட்டங்களும், அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ஓட்டங்களும் எடுத்தனர். இருவரும் கடைசி வரையில் தங்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை. இதில் ஹூடா 4 சிக்ஸர்களை விளாசினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 150 ஓட்டங்களை கடப்பதே சவாலான காரியமாக இருந்தது. அதனை தீபக் ஹூடா, அக்சர் படேல் கூட்டணி தகர்த்தது. இருவரும் 68 ஓட்டங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இலங்கை அணி பந்துவீச்சாளர்கள் தங்களது தரமான லைன் மற்றும் லெந்தினால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தின் சில ஓவர்களில் அச்சுறுத்தினர். மகேஷ் தீக்ஷன, சமிக்க கருணாரத்ன, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களை பெற்றது.

இதில் 163 ஓட்டங்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய பந்துவீச்சாளர் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் பந்தை வெவ்வேறு லெந்தில் வீசி  நிசங்கவை குழப்பி, கடைசி பந்தில் அவரை க்ளீன் போல்டும் செய்தார். தொடர்ந்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் தனஞ்ஜெய டி சில்வா விக்கெட்டையும் கைப்பற்றினார்.

அசலங்கவை உம்ரான் மாலிக் வெளியேற்ற சிறிதுநேரம் நிலைத்து ஆடிய குஷல் மெண்டிஸை 28 ஓட்டங்களுக்கு ஹர்ஷல் படேல் அவுட் ஆக்கினார். அதன்பின் பானுக ராஜபக்ச, ஹஸரங்க என சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

முன்வரிசை வீரர்கள் நிசங்க 1, தனஞ்ஜெய டி சில்வா 8, பானுக ராஜபக்ச 10, அசலங்க 12 என சொற்ப ஓட்டங்களை பெற்றனர்.

எனினும், கப்டன் தசுன் ஷனக அதிரடியாக விளையாடி நம்பிக்கையூட்டினார். 26 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்கள் சேர்த்த அவரை உம்ரான் மாலிக் வீழ்த்தினார். இதன்பின் ஆட்டம் இந்திய வசம் வந்தது. கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட அக்சர் பந்துவீசினார்.

முதல் பந்தே வைட்டாக வீசிய அவரின் பந்துவீச்சில் மூன்றாவது பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் இலங்கை வீரர் கருணாரத்ன. 3 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட அடுத்த இரண்டு பந்தில் ஒரு ஓட்டமும் ஒரு ரன் அவுட்டும் எடுக்கப்பட்டது. ஒரு பந்தில் 4 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு ஓட்டம் மட்டுமே இலங்கை எடுத்தது. ரன் அவுட்டும் ஆனது.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. இதனால் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரில் முதல் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடிக்கப்பட்டாலும், இரண்டு அவுட்கள் ஆனதுடன், வெறும் 7 ரன்களையே இலங்கை பெற்றது. இந்திய தொடரின் முன்னதாக இலங்கை, ஆப்கானுடன் ஆடிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் வென்றிருந்தாலும், சுலபமாக கிடைத்திருக்க வேண்டிய வெற்றியை சிரமப்பட்டே பெற்றது. இலங்கையின் பினிஷிங் பலவீனத்தை அந்த போட்டி வெளிப்படுத்தியது. நேற்றும் அது புலப்பட்டது.

24 வயதான ஷிவம் மாவி, தனது கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன்மூலம் அறிமுக போட்டியில் 4 விக்கெட் எடுத்தார். தீபக் ஹூடா ஆட்டநாயகனாக தெரிவானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

Leave a Comment