புதிய வரி திருத்தங்களுக்கு எதிரான மனுவொன்றை அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவில் கையொப்பமிடும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
20,000 வைத்தியர்களின் கையொப்பங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வைத்தியர் விஜேசிங்க தெரிவித்தார்.
புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மருத்துவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல சங்கங்கள் ஏற்கனவே போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய வரித் திருத்தங்களை ரத்து செய்து அனைவருக்கும் நியாயமான வரிக் கொள்கையை முன்வைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஜனாதிபதியின் தலையீட்டை நாடவுள்ளதாக வைத்தியர் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.