சாதாரண பஸ் கட்டணங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பஸ்களின் கட்டணங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டீசல் விலை இரண்டு தடவைகள் மொத்தமாக 25 ரூபாவால் குறைக்கப்பட்டதன் பின்னர், பஸ் கட்டணத்தை எந்த சதவீதத்தினால் குறைக்க முடியும் என்பதை தீர்மானிக்க தற்போது கணக்கீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
நேற்று (3) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், பஸ் கட்டணக் குறைப்பையும் அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த கணக்கீடுகள் போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஒப்புதல் அளிக்கப்பட்டால், பகிரங்கப்படுத்தப்படும் என்றும் மிராண்டா கூறினார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான முடிவு இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், பொதுமக்களின் சுமையை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முயற்சிப்பதாகவும் மிராண்டா கூறினார்.