பாதாள உலக மன்னன் கஞ்சிபானை இம்ரானிற்காக பிணை கையெழுத்திட்ட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரோ அல்லது பிணையாளிகளோ நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
கஞ்சிபானை இம்ரான் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை, கெசல்வத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் முழுப் பிணைத் தொகையையும் செலுத்த சம்மதித்து காஞ்சிபானை சார்பில் பிணையில் கையெழுத்திட்ட மூவருக்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
2019 ஆம் ஆண்டு கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் காஞ்சிபானை இம்ரானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.