கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராம பட்டியலின மக்கள் 3 தலைமுறைகளுக்கு பிறகு கோயிலுக்குச் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க டிஐஜி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஆதிதிராவிட பகுதியில் உள்ள 600 க்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக வரதராஜ பெருமாள் கோயிலில் சென்று வழிபட அனுமதிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் வைகுண்ட ஏகாதசியான இன்று ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மக்களை ஒன்றிணைத்து விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் கள்ளக்குறிச்சி எஸ்.பி.பகலவன், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட போலீஸார் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
பிறகு ஆதி திராவிட மக்களை ஊரின் மையப் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு மக்களை பாதுகாப்பாக அவர்களது பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
பல தலைமுறைகளாக கோயிலுக்குச் செல்லாமல் தடையிட்டு வந்த நிலையில், இன்று போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள் உதவியுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும், முதன்முறையாக கோயிலுக்கு சென்றதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர், போலீஸார் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினர்.