யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் வாகனம் நிறுத்துவதற்கு குத்தகை அறவிடும் ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று பதவிவிலகிச் செல்லும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உடனடியாக அமுலாகும் வகையில், தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.
யாழ் மாநகரசபைக்குட்பட்ட11 இடங்களில் வீதிகளில் வாகனம் நிறுத்துபவர்களிடம் கட்டணம் அறிவிட, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு யாழ் மாநகரசபை ஒப்பந்தம் வழங்கியிருந்தது.
இது பலத்த விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக வாகனம் நிறுத்துபவர்களுடன், குத்தகை ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனத்தினர் சர்ச்சையில் ஈடுபடும் சம்பவங்கள் பதிவாகின.
இந்த நிலையில், இன்று ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த குத்தகை அறிவிடுபவர்கள், வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
ஸ்ரான்லி வீதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பின்னால் சென்ற குத்தகை அறிவிடுபவர்கள், வர்த்தக நிலையத்திற்குள் வைத்து அவருக்கு பற்றுச்சீட்டு வழங்கியுள்ளனர்.
எனினும், வர்த்தக நிலையத்திலிருந்து வெளியில் வந்த பின்னரே பணம் தருவேன் என அவர் கூறியுள்ளார்.
இதனால் இரு தரப்பிற்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது. இரு தரப்பையும் வர்த்தக நிலையத்திற்கு வெளியில் சென்று தர்க்கப்படுமாறு வர்த்தக நிலைய உரிமையாளர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குத்தகை அறிவிடுபவர்கள், வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, உடன் அமுலாகும் வகையில் மாநகரசபை பகுதியில் குத்தகை அறவிடும் ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்தார்.