பாதெனிய அனுராதபுரம் பிரதான வீதியில் தம்புத்தேகம கொன்வெவ பிரதேசத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கமுவ, மஹகல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான தேஷான் மலிந்த மற்றும் கல்கமுவ, களுந்தேவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியொன்றும் தலாவயிலிருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் தம்புத்தேகம கொன்வெவ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரபல சோப்பு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் நால்வர் தமது பணியை முடித்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மற்றைய இருவர் தம்புத்தேகம வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.