மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, பாலியல் வன்புணர்விற்கு முயன்றதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ் நகரை அண்டிய பகுதியை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
கணவன் மனைவிக்கிடையில் சில காலமாக தகராறு நிலவுகிறது.
கடந்த 23ம் திகதி வீட்டில் குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த போது. நண்பர்களுடன் வீட்டிற்கு வந்த கணவன், கழுத்தில் கத்தி வைத்து பாலியல் வன்புணர்விற்கு முயன்றதாகவும், சத்தமிட்டதையடுத்து தப்பியோடி விட்டதாகவும் மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் ஏற்கெனவே சில குற்றச்சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபராக பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தவர்.
அவரை கடந்த வெள்ளிக்கிழமை பொலிசார் கைது செய்தனர். மனைவியின் கழுத்தில் தான் கத்தி வைக்கவில்லையென்றும், பின்பக்கமாக சென்று அவரை கட்டியணைத்ததாகவும் கைதான கணவன் தெரிவித்தார்.
அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.