சுனாமி பேபி என அழைக்கப்படும் ஜெயராசா அபிலாஷ், சுனாமிப் பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தனது வீட்டில் நிர்மாணித்துள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.
2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையில் சிக்கி, கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் தமது குழந்தை என 9 தாய்மார்கள் உரிமை கோரியிருந்தனர்.
நீண்ட போராட்டத்தின் பின்னர், உரிமைகோரிய தாய்மார்களின் மரபணுக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, உரிமை கோரியவர்களில் ஒருவரான ஜெயராசா தம்பதிகளின் மரபணுவோடு, அபிலாஷின் மரபணு ஒருமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்பின்னர் ஜெயராசா தம்பதிகளிடம் அபிலாஷ் ஒப்படைக்கப்பட்டார். அன்றிலிருந்து அபிலாஷை, சுனாமி பேபி என ஊரவர்கள் அழைத்து வருகின்றனர்.
தற்போது செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் அபிலாஷ், டீ.என்.ஏ பரிசோதனையில்லாது விட்டால், தான் யாருடைய குழந்தை என்ற குழப்பம் நீடித்திருக்கும் எனத் தெரிவித்தார்.