Pagetamil
இலங்கை

கடல் வளங்களைச் சூறையாடுவதை நிறுத்துவதே கடற்கோளில் பலியானவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி: பொ.ஐங்கரநேசன்

இலங்கையைக் கடற்கோள் தாக்கியபோது கரையோரச் சூழற்தொகுதிகள் அழிக்கப்பட்ட இடங்களில் உயிர்ப்பலியெடுப்பு உச்சத்தைத் தொட்டது. இதன்மூலம் கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்ற வலுவான பாடத்தை எமக்குப் போதித்தது. ஆனால், நாம் பட்டும் திருந்தாத பாவிகளாகவே இன்னமும் உள்ளோம். ஒருபுறம், தொடர்ந்தும் கடல்சார் வளங்களைச் சூறையாடிகொண்டு, இன்னொருபுறம் கடற்கோளில் பலியானவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகளையும் செய்து வருகிறோம். கடல்சார் வளங்களைச் சூறையாடுவதை உடனடியாக நிறுத்துவதே கடற்கோளில் பலியானவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி கடற்கோள் தாக்கி முப்பத்தையாயிரத்துக்கும் அதிகமானோரைப் பலியெடுத்திருந்தது. அதன் 18ஆவது நினைவை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு உரைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

எல்லா வளங்களையும் போன்றே கடல்சார் வளங்களும் மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் வருங்காலத் தலைமுறைகளுக்குமானவை. இங்கு உண்ணுவதும் உணவாவதும், எடுப்பதும் கொடுப்பதும் இயற்கையின் நியதி. இயற்கைச் சூழலின் சமநிலை விதியும் இதுவே. ஆனால், பேராசை மிக்க மனிதர்கள் கடல் வளங்கள் அனைத்தும் தமக்கு மட்டுமே உரித்தானதென வளங்களைச் சூறையாடுவதற்குத் தலைப்பட்டுள்ளார்கள். இதனால், இயற்கைச் சமநிலை குழம்பி இயற்கைச் சீற்றங்கள் பேரனர்த்தங்களாக வெளிப்பட்டு வருகின்றன.

இழுவைப் படகுகளின் மூலம் கடலடி வளங்களை வாரிச்சுருட்டி வருகின்றோம். கடலகப் பவளப் பாறைகள் துவம்சம் செய்யப்படுகின்றன. கடலட்டைப் பண்ணைகளையும் இறாற் பண்ணைகளையும் இயற்கைக்கு விரோதமான ஒற்றையினக் கடல் வேளாண்மையாக விரிவாக்கி வருகிறோம். கரையோரக் கண்டற்காடுகள் தீமூட்டி அழிக்கப்படுகின்றன. மணல் மலைகள் அனுதினமும் கொள்ளை போகின்றன. இப்படி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் சேர்த்து வாழ்வளிக்க வேண்டிய கடல்சார்ந்த வளங்களை இலாப வேட்கைக்காகத் தொடர்ந்தும் சீரழித்து வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சிய மீன்பிடியால் கடலில் மீனினங்கள் அருகி வருகின்றன. ஒற்றையினக் கடற்ப் பண்ணைகளால் கடலின் உயிர்ப்பல்வகைமை கேள்விக்குறியாகி வருகிறது. கடலில் நாம் சேர்த்துவரும் இரசாயனங்களால் கரையோரக்கடல் இறக்கத் தொடங்கியுள்ளது. விரோதமான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ளாத கடல் இன்னுமொருதடவை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடற்கோளின் படிப்பினையை ஏற்று கடற்சூழற்தொகுதிக்கு விரோதமான செயற்பாடுகளை நிறுத்துவோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

விசாரணைக்கு பயந்து மாணவனின் வகுப்புத்தடையை நீக்கிய துணைவேந்தர்!

Pagetamil

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!