ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள தாசரிபாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பர்லய்யா. இவரது மனைவி கங்குலம்மா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பல்நாடு மாவட்டம், சத்தனபல்லி மாநகராட்சி பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இவர்களது மூத்த மகன் அனில் (17). இளைய மகள் சம்மக்கா (14).
உடல் நலக் குறைவு காரணமாக பர்லய்யா வீட்டில் ஓய்வெடுத்தார். குடும்பத்தை நடத்த இங்குள்ள தனியார் பள்ளியில் கங்குலம்மா ஆயாவாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சத்தனபல்லியில் சாலை ஓரத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய அனில், சில மாதங்களாக விநாயக் நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி இரவு ஓட்டல் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை நீக்க அவர் கால்வாயில் இறங்கினார். அப்போது விஷவாயு காரணமாக அனில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சத்தனபல்லி மாநகராட்சி நிர்வாகத்தின் தவறு இருப்பதால், உயிரிழந்த அனிலின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலை சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சிக்கு வந்தது.
காசோலையை வாங்க பர்லய்யா, கங்குலம்மா ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றபோது, துணை மேயரின் கணவர் சாம்பசிவ ராவ் பேரம் பேசினார். ரூ. 5 லட்சத்தில், ரூ. 2.5 லட்சத்தை லஞ்சமாக தர வேண்டும் என்று கங்குலம்மாவிடம் அவர் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் போலீஸில் புகார் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அம்பாட்டி ராம்பாபுவை சந்தித்து கணவரும் மனைவியும் முறையிட்டனர். இதனை கேட்ட அமைச்சர், லஞ்சப் பணத்தை கொடுத்தால்தான் காசோலை கிடைக்கும் என கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை கங்குலம்மா கண்ணீர்மல்க கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், முதல்வர் ஜெகன் மோகன் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.