பதுளை மற்றும் கேகாலையில் காற்றின் தர நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வளிமண்டலத்தில் உள்ள தூசி துகள்கள், பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பதுளை மற்றும் கேகாலையில் காலை 8 மணியளவில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டத்தில் இருந்தது.
அந்த இரண்டு பகுதிகளிலும் காற்றின் தரச் சுட்டெண் 59 மற்றும் 53 ஆகவும், கொழும்பில் 51 ஆகவும் இருந்தது.
வவுனியா, திருகோணமலை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, காலி ஆகிய இடங்களில் மிதமான மட்டத்தில் இருக்கும் அதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, குருநாகல், புத்தளம் மற்றும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்தும் ஆரோக்கியமற்றதாக காணப்படுகிறது.
இலங்கையின் பல நகரங்களில் சுற்றுப்புற காற்றின் தரம் அண்மைய வாரங்களில் ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடைந்துள்ளது, இதனால் முடிந்தவரை முகக்கவசத்தை அணியுமாறு மக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய துணைக்கண்டத்தில் இருந்து வளிமண்டலத்தில் காற்று மாசுக்கள் நுழைவதால் இலங்கையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.