போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட இரண்டு சுங்க பரிசோதகர்களை விடுவிக்க, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு ஒரு சட்டத்தரணி ரூ.10 மில்லியன் இலஞ்சம் கொடுக்க முனைந்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இது தொடர்பில் தமது மேலதிகாரிகளுக்கு அறிவித்து எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்கியுள்ளனர். இலஞ்சத்தை நிராகரித்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சுங்கப் பரிசோதகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சுங்கப் பரிசோதகர்கள் இருவரும் சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு கோட்டை சைத்திய வீதியில் 11 போதைப்பொருள் மாத்திரைகளுடன் சுங்க பரிசோதகர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார்.
சுங்கப் பரிசோதகரிடம் நடத்திய விசாரணையில், மற்றொரு சுங்கப் பரிசோதகரிடம் இருந்து தான் இந்த போதைப் பொருட்களைப் பெற்றதாகத் தெரிவித்தார். இரண்டாவது சுங்க பரிசோதகர் துறைமுகத்தில் உள்ள அறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 2 கிராம் குஷ் மற்றும் 1 கிராம் கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அறையில், வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பார்சல் அனுப்பப் பயன்படுத்திய மூன்று பைகளும் கண்டெடுக்கப்பட்டன. வெளிநாட்டு தபால் பொருட்களாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் அடங்கிய பார்சல்களை இந்த பரிசோதகர்கள் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பரிசோதகர்களில் ஒருவரின் தந்தை பிரபல சட்டத்தரணி என்றும் தகவல் கிடைத்துள்ளது.