அருணாச்சல பிரதேச எல்லை அருகே கடந்த 9-ம் தேதி இந்திய, சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இருதரப்பு வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு முதலே இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே இதுபோன்ற மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய கமாண்டர், சீன கமாண்டருடன் கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தினார்.
கடந்த 2020-ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அருணாச்சல பிரதேச எல்லையில் மீண்டும் இதுபோன்ற மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.