யாழ் மாநகரசபையின் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லுண்டாய் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ் மாநகரசபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகளை தமது பகுதியில் கொட்ட வேண்டாம் என தெரிவித்து, வலி தென்மேற்கு பிரதேச சபையினர், பொதுமக்கள் இணைந்து, இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழிவுகளை ஏற்றி வந்த மாநகர சபையினரின் உழவு இயந்திரங்களை வழிமறித்து இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் 26ஏக்கர் நிலப்பரப்பில் திண்மக் கழிவுகளை தரம்பிரிக்காது கொட்டுவதாகவும், நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்படுவதாகவும் வலிதென்மேற்கு பிரதேச சபையினரால் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அத்துடன், அந்த கழிவுகளை தம்மிடம் வழங்குமாறும், தாம் சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுவதாகவும் வலி தென்மேற்கு பிரதேசசபையினரால் கோரப்பட்டது.
நேற்று இரவு, யாழ் முதல்வர் வி.மணிவண்ணன், வலிதென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் ஜெபநேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வலி தென்மேற்கு பிரதேசசபையின் நிலைப்பாடு தொடர்பில் துறைசார்ந்தவர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் நடத்தலாமென்றும், அதுவரை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டாம் என கோரியதாகவும் தெரிய வருகிறது.
எனினும், வலி தென்மேற்கு தவிசாளர் அதற்கு இணங்கவில்லை. அப்படியானால் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.
இன்று இரண்டாவது நாளாகவும் கழிவுகள் கொட்ட அனுமதிக்கப்படவில்லை. திண்மக்கழிவுகளை ஏற்றிய சுமார் 10 உழவு இயந்திரங்கள் 1 மணியளவில் மாநகர சபைக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மாநகர சபைரியினரின் திண்மக்கழிவுகளை கல்லூண்டாய் பகுதயில் கொட்டவிடவில்லை என தெரிவித்து மாநகர சபையின் சுகாதார மேற்பார்வையாளர் ஒருவரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்த வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், 2015ஆம் ஆண்டில் மாநகர சபைக்கு எதிராக மானிப்பாய் பொலிசார் வழக்கு தாக்கல் செய்து பின்னர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்ற தீர்பினை மீறி செயற்பட்டதாக யாழ் மாநகர சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்தார்.
இதற்குள், அரச சேவையை மேற்கொள்ள வலிதென்மேற்கு பிரதேசசபையும், சிலரும் தடையாக உள்ளதாக யாழ்ப்பாணம் மாநகரசபையின் சட்டத்தரணி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையையடுத்து, கல்லுண்டாயில் கழிவுகளை கொட்டுவதை தடை செய்து நடத்தப்படும் போராட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.