ஃபிஃபா உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகவும், தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளதுமான பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது, தரவரிசையில் 22வது இடத்திலுள்ள மொராக்கோ.
இன்று நடந்த குரூப் எஃவ் ஆட்டத்தில் பெல்ஜியத்தை 2-0 என மொராக்கோ தோற்கடித்தது. இந்த கால்பந்து தொடரில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் எஃவ் பிரிவில் இப்போதைக்கு மொராக்கோ முதலிடம் பிடித்துள்ளது. அதேவேளை, பெல்ஜியத்தின் அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.
மொராக்கோவின் அப்தெல்ஹமிட் சபிரி களமிறக்கப்பட்ட 5வது நிமிடத்தில்- ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக்கை கோலாக்கினார். மேலதிக நேரத்தில் அபுக்லால் ஒரு கோலடித்தார்.
அடுத்த சுற்றிற்கு முன்னேறும் பிரகாசமான வாய்ப்பு மொராக்கோவிற்கு கிட்டியுள்ளது.
போட்டியின் பின்னர் பெல்ஜியம் வீரர் கெவின் டி புரூய்ன் தனது நாட்டின் ‘கோல்டன் ஜெனரேஷன்’ என்று அழைக்கப்படுபவை முடிவுக்கு வந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார், குழு நிலைகளுக்கு முன்பே உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் முடிந்துவிடக்கூடும் என்றார்.
உலகக்கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு- “அதற்கு வாய்ப்பில்லை, நாங்கள் மிகவும் வயதாகிவிட்டோம். எங்கள் வாய்ப்பு 2018 என்று நான் நினைக்கிறேன். எங்களிடம் ஒரு நல்ல குழு உள்ளது, ஆனால் அது வயதாகி வருகிறது“ என்றார்.
கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவை போன்று கால்பந்தில் பெல்ஜியம் சோக்கர்ஸ் என அழைக்கப்படுகிறது. பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டத்தில் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறிவிடும். இதற்கு உதாரணம் 2018 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2020ஆம் ஆண்டு யூரோ கோப்பை கால் இறுதியில் இத்தாலியிடமும், யுஇஎஃப்ஏ நஷன்ஸ் கோப்பை அரை இறுதியில் பிரான்ஸிடமும் பெல்ஜியம் வீழ்ந்திருந்தது.