தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் தமக்கிடையில் சமூக ஊடக மோதலை தொடர்வதில்லை, அவ்வாறு மோதிக்கொண்டிருக்கும் நபர்களிற்கு அறிவுரை கூறி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதென முடிவாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (26) நடந்த போது இந்த முடிவு எட்டப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளான இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், எம்.ஏ.சுமந்திரன், சுரேன் குருசாமி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் தொடக்கத்தில் ‘அதிக உணர்திறன் வாய்ந்த’ இராஜதந்திர விவகாரம் ஒன்று ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டது. விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, அது பற்றிய தகவல்களை வெளியிடுவதை தமிழ்பக்கம் தவிர்த்துக் கொண்டது.
ஏற்கெனவே, நடந்த சில கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட ‘அதிக உணர்திறன் வாய்ந்த’ விவகாரங்களை தமிழ்பக்கம் முந்திக் கொண்டு வெளியிட்டதால், தமது இராஜதந்திர நகர்வுகளில் நெருக்கடியை எதிர்கொண்டதாக கூட்டமைப்பின் பிரமுகர்களிடமுள்ள வருத்தத்தின் நியாயத்தை புரிந்து கொண்டு, இம்முறை ‘அதிக உணர்திறன் வாய்ந்த’ விவகாரங்களை தவிர்த்து விடுகிறோம்.
இன்றைய கலந்துரையாடலில் மேலும் இரண்டு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
முதலாவது, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு, பாராளுமன்றகுழு கூட்டங்கள் கூடாததால் சரியான புரிந்துணர்வின்மை ஏற்பட்டு, கீழ் மட்ட உறுப்பினர்களிற்குள் மோதல், சமூக ஊடக மோதல் ஏற்படுவது சுட்டிக்காட்டப்பட்டது.
இதை தவிர்க்க, கிரமமாக சந்திப்புக்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வுகளிற்கு முதலும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூட முடிவாகியது. இதன்படி மாதாந்தம் 2 பாராளுமன்ற குழு கூட்டங்கள் நடக்கும். திங்கட்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு பாராளுமன்ற குழு கூட்டம் நடக்கும்.
மாதாந்தம் ஒரு முறை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடக்குமென தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த விவகாரமாக, கூட்டமைப்பின் சமூக ஊடக மோதல் பற்றி விவாதிக்கப்பட்டது.
ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பேஸ்புக்கில் இட்ட பதிவுகள் தொடர்பான அதிருப்தியை மாவை சேனாதிராசா வெளிப்படுத்தினார்.
இதன்போது, சுமந்திரன் தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த வினோவின் பதிவுகளை வாசித்து காண்பித்தார்.
கூட்டமைப்பு விபச்சார விடுதி, கைவிடப்பட்ட வீட்டு சின்னம் போராளிகளால் புனரமைகக்ப்பட்டது போன்ற கருத்துக்கள் அதிகம் விவாதிக்கப்பட்டது.
ரெலோவினரும் சளைக்காமல் பதிலடி கொடுத்தனர். தமிழ் அரசு கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள்- குறிப்பாக சயந்தன் போன்றவர்கள், சமூக ஊடகங்களில் அநாகரிகமாக கருத்திட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.
வினோ நோகராதலிங்கம் தனது கருத்துக்கள் பற்றி சமூக ஊடகங்களில் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது கட்சி நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ் அரசு கட்சி கேட்டது.
எனினும், ரெலோ அதை நிராகரித்தது. தமிழ் அரசு கட்சியின் தரப்பில் அநாகரிகமாக கருத்திட்டவர்கள் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியது.
இது முடிவற்ற விவாதமாக நீண்டதையடுத்து, இரு தரப்பும் ஒரு இணக்கத்தை எட்டின. அதன்படி, இரு தரப்பினரும் சமூக ஊடக மோதலை தொடர்வதில்லை.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்கள் சமூக ஊடக மோதலில் ஈடுபட்டால் அவர்களை கட்டுப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடல் முடிந்த பின் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
வினோ நோகராதலிங்கம் பதிவிட்ட அனேக சர்ச்சைக்குரிய பதிவுகள் இரவில்தான் பதிவிடப்பட்டன. அதேபோல, தமிழ் அரசு கட்சியின் தரப்பில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இடுபவர்களும் இரவில்தான் பதிவிடுகிறார்கள்.
இந்தவகை இரவு நேர பதிவுகள் பற்றி பொதுவாக அப்பிராயமொன்றுமுள்ளது.
இன்று அந்த அப்பிராயத்தை எம்.ஏ.சுமந்திரன் பிரதிபலித்தார். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர், ரெலோ செயலாளர் கோவிந்தம் கருணாகரனிடம் தனிப்பட்ட முறையில் இரவு நேர பதிவை சுட்டிக்காட்டி, “வினோ இரவில் மது அருந்துவாரா?“ என்ற சாரப்பட கேட்டார்.
“இருக்கலாம். அவர் மது அருந்தக்கூடும். அவர் மட்டுமல்ல, வேறும் பலரும் அருந்தலாம். அதிகமேன், தமிழ் அரசு கட்சியின் தரப்பில் இரவு நேர பதிவிடும் சயந்தன் போன்றவர்களும் மது அருந்திவிட்டுத்தானே பதிவிடுகிறார்கள்“ என கோவிந்தம் கருணாகரன் பதிலளித்து விட்டு சென்றார்.