சீனாவில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்தவகையில், உரும்கி நகரில் லொக் டவுனுக்கு எதிராக மக்கள் போராடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 66.33 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுஉலகின் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் தினசரி 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
வைரஸ் பரவலை தடுக்க தலைநகர் பெய்ஜிங் உட்பட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையைத் தொடும்வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சீன அரசின் கடும் கட்டுப்பாடுகளால் தனது தந்தையை இழந்த சாவோ என்ற இளைஞர் கூறும்போது, “ இந்த அரசு என் தந்தையை கொன்றுவிட்டது. உடல் நிலை சரியில்லாத என் தந்தையை கட்டுப்பாடுகள் காரணமாக உரிய நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்ல முடியவில்லை. எனது தந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும். ஏன் என்னை அடைத்து வைத்துள்ளீர்கள். ஏன் எனது தந்தையின் உயிரை பறித்தீர்கள்” என கண்ணீருடன் கேட்டுள்ளார்.
சாவோ மட்டுமல்ல சீனாவின் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம் காங்சாவோ நகரத்தில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து வீதியில் போராட்டம் நடத்தினர். ”எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றால் நாங்கள் இறக்கவும் தயார்” என்று சீன அரசை நோக்கி எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர்.
ஜின்ஜியாங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்தன. கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
கட்டுப்பாடுகள் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர்.
வியாழன் இரவு பிராந்திய தலைநகர் உரும்கியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பிடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
உரும்கியில் உள்ள மக்கள் கோவிட் நடவடிக்கைகளுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடும் காட்சிகள் சமூக ஊடக வீடியோக்களில் காணக்கிடைத்தது.
நூற்றுக்கணக்கான மக்கள் இரவு நேரத்தில் உரும்கி நகர அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியே கூட்டம் கூட்டமாகக் கூடி, “லொக்டவுனை விலக்குங்கள்!” என கோசமெழுப்பினர்.
மற்றொரு கிளிப்பில், நகரின் கிழக்கில் உள்ள ஒரு சுற்றுப்புறத்தின் வழியாக டஜன் கணக்கான மக்கள் அணிவகுத்துச் செல்வதைக் காண முடிந்தது.