முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
ஞாயிற்றுக்கிழமை (20) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவை பல அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
எந்தவொரு முக்கிய அரசாங்கப் பதவிகளையும் வகிக்காத தனிநபருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் தொடர்பில் நாடாளுமன்றத் தலைவரிடமிருந்து விளக்கமொன்றை எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத பசில் ராஜபக்சவுக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது எப்படி பிரமுகர் ஓய்வறை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை முன்மொழிகிறது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பசில் ராஜபக்ஷவை வரவேற்றவர்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவும் அடங்குவதாக தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஒருவரை வரவேற்கும் நடவடிக்கையில் இவ்வாறான ஆணைக்குழுவின் தலைவர் ஈடுபடும் போது அரசாங்கம் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ உத்தேசித்துள்ளது என கேள்வி எழுப்பிய அவர், சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிப்பதற்கும் தேசத்தின் அபிவிருத்திக்கும் இவ்வாறான நபர்கள் இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
பசிலை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரா பெர்னாண்டோ விளக்கமொன்றை அளித்துள்ளார்.
அதில், பசில் ராஜபக்ஷவை பார்க்க தான் செல்லவில்லை என்றும், அப்போது கட்டுநாயக்கவில் தங்கியிருந்ததாகவும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதற்காக சென்றதாகவும், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்தார்.