திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. இது பிசியோதெரபி சிகிச்சை என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.47 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக சிபிஐ கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. போலி நிறுவனங்கள் பலவற்றை நடத்தி அதன்மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சிறையில் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கின் சாட்சியங்களை சந்தித்து பேசுவதாகவும் தெரிவித்தது.
இது தொடர்பாக டெல்லி தலைமை செயலாளர் அறிக்கைதாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் திகார் சிறை தலைமை இயக்குநர் உட்பட 28 அதிகாரிகள் திகார் சிறையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தங்கியிருந்த அறையில் உள்ள சிசிடிவி கேமராவில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி அன்று பதிவான வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அதில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்துவிடுகிறார். மற்ற 3 பேர் சத்யேந்தர் ஜெயினுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘சிறையில் விஐபி போல் சத்யேந்தர் ஜெயின் உள்ளார். கைதிக்கு எதற்கு மசாஜ்? அவர் கைதிகளுக்கான சீருடையில் இல்லை. அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் 4 பேர் ஏன் அனுமதிக்கப்பட்டனர்? இதுகுறித்து டெல்லி முதல்வர் பதில் அளிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறியதாவது: இந்த வீடியோவை பாஜக வெளியிட்டு பொய்த்தகவலை பரப்புகிறது. பாஜக சதியால் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாதமாக சிறையில் உள்ளார். சிறையில் இருந்தபோது அவர் தவறி விழுந்ததில் முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்தன. அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது சொகுசு மசாஜ் அல்ல. காயம் அடைந்த நபருக்கு ‘பிரஷ்ஷர் தெரபி’ அளிக்கப்படுகிறது. இதில் விதிமுறை மீறல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.