நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், நடிகை பூனம் பாண்டேயும் ஆபாச படம் தயாரித்து ஒடிடி தளத்தில் விற்பனை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி ஆபாச வீடியோ எடுத்து ஒடிடி தளத்தில் விற்பனை செய்ததாக மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
அதே ஆண்டு பெப்ரவரி மாதம் மும்பை மத் தீவில் மொடல் அழகிகளைப் பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்தபோது போலீஸார் ரெய்டு நடத்தி தயாரிப்பாளர் யாஷ்மின் கான் உட்பட 5 பேரை கைதுசெய்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.
5 மாதங்கள் தொடர்ந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிற்கு ஆபாச படம் தயாரிப்பதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வழக்கில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மற்றும் ஷெர்லின் சோப்ராவிற்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ராஜ் குந்த்ரா சொந்தமாக மொபைல் ஆப் உருவாக்கி அதில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், “தொழிலதிபர் ராஜ் குந்த்ரா, மொடல் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, தயாரிப்பாளர் மீதா ஜுன்ஜுன்வாலா மற்றும் கேமராமென்கள் இணைந்து மும்பை புறநகர் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து ஆபாச வீடியோ தயாரித்து அதனை பல்வேறு ஒடிடி தளங்களில் வெளியிட்டுள்ளனர். ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
450 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் ராஜ் குந்த்ரா, ராஜ் குந்த்ராவின் பணியாளர் உமேஷ் காமத், ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே, கேமராமென் ராஜு துபே, ஜுன்ஜுன்வாலா, பனானா பிரைம் ஒடிடி தள இயக்குநர் சுவஜித் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒடிடி தளத்தில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டேயின் ஆபாச வீடியோக்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
பனானா பிரைம் ஒடிடி இயக்குநர் சுவஜித், ஆபாச பகுதிகளை கொண்ட வெப் சீரியஸ்களை தயாரித்து தனது தளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.
அதோடு பூனம் பாண்டே ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனது ஆபாச வீடியோவை தயாரித்து அதனை ராஜ் குந்த்ராவின் கம்பெனியின் உதவியோடு தயாரித்த மொபைல் ஆப்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
ஷெர்லின் சோப்ராவின் ஆபாச வீடியோவை கேமரா மென் ராஜு துபே படப்பிடிப்பு நடத்தி இருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர் மீதா ஜுன்ஜுன்வாலாவும், ராஜ் குந்த்ராவின் கம்பெனியும் ஆபாச வீடியோவிற்கு தேவையான கதைகளை உருவாக்க ஷெர்லின் சோப்ராவிற்கு உதவி செய்துள்ளனர். இதே போன்று பூனம் பாண்டேயும் ராஜ் குந்த்ராவின் ஆர்ம்ஸ் பிரைம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ‘தி பூனம் பாண்டே’ என்ற மொபைல் ஆப் உருவாக்கி அதில் தனது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மொடல் மற்றும் நடிகைக்கு ஆபாச வீடியோ தயாரித்து ஒடிடி தளம், மொபைல் ஆப்களில் வெளியிட ராஜ் குந்த்ராவின் கம்பெனி கணிசமாக தொகையை கட்டணமாக வசூலித்திருக்கிறது.
ஆபாச வீடியோவில் நடித்த சில நடிகைகள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
உமேஷ் காமத் லண்டனைச் சேர்ந்த ஹாட்ஷூட் என்ற நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். ஹாட்ஷூட் நிறுவனம் ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமானது. இந்த ஹாட்ஷூட் மொபைல் ஆப்பில்தான் ராஜ் குந்த்ரா அதிகமான ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தார்” என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.