வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விவசாயக் கண்டங்களில் சட்டவிரோத மண் அகழ்வு பணிகள் இரவு வேளைகளில் இடம்பெற்று வருவதனை தடுத்து நிறுத்தாமல் பாராமுகமாக இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கெதிராக மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வாகநேரி நீர்பாசனத்திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினால் தங்கள் பிரதேச விவசாயக் கண்டங்களில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வினால் ஏற்படும் பாதிப்பின் தாக்கம் குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு விடுத்த வேண்டுகோளினையடுத்து குறித்த பிரதேசங்களுக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடங்கள் மண் அகழ்வினால் பாதிக்கப்பட்ட பாலங்கள், வாய்க்கால்கள் வீதிகள் மற்றும் மணல் சேகரிக்கப்படும் இடங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது-
எமது மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் வட்டவானில் பொதுமக்களின் காணிகள் இரால் பண்ணைக்கென பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. கிரான் பிரதேசத்தில் மயிலத்தமடு மேச்சல் தரை பிரதேசம் பிரச்சினை, வாகநேரியில் சட்ட விரோத மண் அகழ்வு பிரச்சினை என பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன.
பயிர்களை பாதுகாக்கும் வேலிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன என்றார்.
வாகனேரி கண்டத்து வயல்களுக்கு நீர்பாச்சுகின்ற ஆறுகளிலும் வயல்களிலும் அணைகட்டுகளிலும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெறுவதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
சட்டவிரோத மண் அகழ்வு. வனபாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெறுகின்றது. இது பாரிய அளவில் சந்தேகத்தை உண்டுபண்ணுகின்றது. பின்னணியில் யார் உள்ளார். மாவட்டத்தில் இரண்டு அரச சார் அமைச்சர்கள் என்ன செய்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுச் சூழலுக்கான அமைச்சர் உள்ளார். பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகள் அரச காணிகள் வனத்துறைக்கு சொந்தமான காணிகள் என கையகப்படுதிவிட்டு. சட்ட விரோத மண் அகழ்வு மற்றும் வள சுரண்டல்களுக்கு இடமளிக்கின்றார்கள்.
ஆனால் அங்குள்ள மக்கள் காட்டுக்குள் விறகு வெட்டுவதற்காக செல்லும் வேளை வன பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அதற்கான தண்டனை உட்பட இருபதாயிரம் மட்டில் அபராதமும் செலுத்தியுள்ளார்கள். இவை இப்படி இருக்க மிகவும் வெளிப்படையான முறையில் மண் அகழ்வானது இடம்பெறுகின்றது. வனத்துறையினருக்கு சொந்தமான காணியில் மண் சேமிக்கப்பட்டு கடத்தப்படுகின்றது. இதன் பின்னணியில் வனத்துறையும் உள்ளதா? மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் இதுதான்.
இவ்வாறான விடயங்கள் வெளியில் வரும் என்னும் பயமே காரணம். மண் அகழ்வுக்கு எமது மாவட்ட இரு அமைச்சர்களும் பின்னால் உள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்புக்கு என கட்டப்படுள்ள வரம்பை உடைத்து அதன் மூலம் கடத்துகின்றனர். அடுத்ததாக இங்குள்ள அரசியல் வாதிகள் தமது அரசியல் சுயலாபம் மற்றும் சுயநலம் கருதி தமிழ் முஸ்லீம் என பாகுபாடு காட்டி மக்களை பிரித்துவிட்டு இவ்வாறான சட்டவிரோத செயல்பாடுகளில் முக்கியமா ஒன்றாக செயல்படுகின்றார்கள்.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பக்கமாக பிரித்து மக்களுக்கு சொந்தமான வளங்கள் சுறையாடப்படுகின்றது. இவ் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் அல்லாதுவிடில் எமது மக்களும் எதிர்கால சந்ததியும் நிர்க்கதியாகுவது வெகு விரைவில் நடைபெறும். என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
-க.ருத்திரன்-