தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (16) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும்.
இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு என்ற இடத்தில்12 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 9 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், குமரி மாவட்டம்கீழ்கோதையாறில் 7 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.