வடமராட்சி துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்று திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்று அமைய பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் ஆலோசனைக்கு அமைய உப. பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.