திலினி பிரியமாலி செய்த பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) மூத்த நடிகை சங்கீதா வீரரத்னவிடம் ஐந்து மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
வீரரத்னவிடம் பிரியமாலி உடனான உறவு மற்றும் அவருடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் திலினி சம்பந்தப்பட்ட காணொளிக் காட்சியையும் வீரரத்னவிடம் காட்டி விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சங்கீதா வீரரத்ன வழங்கிய தகவல் தொடர்பில் மீள் விசாரணை நடத்தப்படும் எனவும், மேலும் அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என கருதினால் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படுவார் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நடிகை செமினி இட்டமல்கொடவுக்கும் திலினி பிரியமாலிக்கும் உள்ள உறவு குறித்து கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு மணிநேர வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
திலினி பிரியமாலி தொடர்பான விசாரணை தொடர்பில் மற்றுமொரு நடிகையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவில்லை. பிரபல அறிவிப்பாளர் மற்றும் அவரது மனைவிக்கு வீடு வாங்குவதற்காக பிரியாமாலி ரூ.15 மில்லியன் கொடுத்ததாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நடிகரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் குமாரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சனிக்கிழமை ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ப்ரியமாலியுடன் உள்ள தொடர்பு மற்றும் படம் தயாரிப்பது குறித்து சிஐடி அவரிடம் விசாரணை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியமாலி உடனான உறவு குறித்தும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தியதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.