மெதிரிகிரிய பிரதேசத்தில் ஆஷாவரீ என்ற சிறுவர் இசைக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நன்னடத்தை திணைக்களம் மற்றும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த பரபரப்பான இசைக்குழு பற்றி பேசப்பட்டு வருகிறது.
தற்போது திறந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு இந்த சிறுவர்கள் குழுவில் உள்ள சிறுமிகளின் திறன் மிக உயர்ந்த அளவில் உள்ளது.
எவ்வாறாயினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பயன்படுத்தி இசைக் குழுவை நடத்த முடியாது என தொழிலாளர் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொழிலாளர் திணைக்களம் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து இசைக்குழுவின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேவேளை, ஆஷாவரீ இசைக்குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
திறமையான குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும் என்கிறார்.
மைக்கல் ஜக்சன் 10 வயதிலேயே மேடைகளில் பாட ஆரம்பித்து விட்டார் என்றும், தான் 16 வயதில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டேன் என்றும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.