ஹில்டன் ஹோட்டலில் 18 நாட்கள் தங்கியிருந்தும் ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரை நவம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிக்கு 527,800.00 ரூபாவை ஹோட்டலுக்கு செலுத்தத் தவறியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் அறிவித்தனர்.
ஹில்டன் ஹோட்டலில் விருந்தினர்கள் சேவை பிரிவில் பணிபுரியும் கோசல பெர்னாண்டோ செய்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்த போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்ற நீதவான், பிக்குவை நவம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஓகஸ்ட் 31ஆம் திகதி பிக்கு ஹில்டன் ஹோட்டலுக்கு வந்து அங்கு ஹோட்டல் அறை ஒன்றை முன்பதிவு செய்தார்.
செப்டெம்பர் 19ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்த பிக்கு, கட்டணத்தை செலுத்தவில்லை.