இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை கண்டறிந்ததாக, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.
நவம்பர் 2, 2022 அன்று காய்ச்சல் மற்றும் தோல் கொப்புளங்களுடன் 20 வயதுடைய ஆண் தேசிய பாலியல் தொற்று நோய் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.
நவம்பர் 1ஆம் திகதி டுபாயில் இருந்து திரும்பிய அவருக்கு நிணநீர் மண்டலங்கள் பெரிதாகி சோர்வாக இருந்தது. அவருக்கு குரங்கு அம்மையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பல மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நவம்பர் 2 மதியம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒரே இரவில் குரங்கு அம்மையை கண்டறியும் நிகழ்நேர பிசிஆர் சோதனையை மேற்கொண்டது. ஒவ்வொரு மாதிரியிலும் குறிப்பிட்ட இலக்கு மரபணுக்கள் கண்டறியப்பட்டன. கவனமாகப் பரிசோதித்ததில் நோயாளிக்கு நேற்று (3) குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்நேர PCR பரிசோதனையை நிறுவியதில் இருந்து, ஆறு சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை குரங்கு அம்மைக்காக பரிசோதித்துள்ளது.
7வது பரிசோதனையில், இலங்கையின் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவன ஆதாரங்களின்படி, குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று, அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும். இது மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலில் இருந்து மனிதர்களுக்கும் பரவும்.