இன்ஸ்டன்ட் முறையில் மெசேஜ் செய்ய உதவும் தளமான வட்ஸ்அப் செயலியில் நான்கு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கம்யூனிட்டிஸ், குழுவில் 1024 பேர் வரை சட் செய்யும் வசதி, வாக்கெடுப்பு நடத்தும் அம்சம் போன்றவை இதில் அடங்கும்.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஓடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.
பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட் மற்றும் அம்சங்களை வட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது.
அந்தவகையில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 4 அம்சங்கள் பற்றிய விபரம் இதோ-
கம்யூனிட்டிஸ்: கடந்த ஏப்ரலில் கம்யூனிட்டிஸ் என்ற அம்சத்தை அறிமுக செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக மெட்டா தெரிவித்தது. இப்போது அது அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாகி உள்ளது. படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் இது ரோல் அவுட் செய்யப்படும் என தெரிகிறது. பல்வேறு வட்ஸ்அப் குழுக்களை ஒரே குடையின் கீழ் இணைக்க உதவுகிறது கம்யூனிட்டிஸ். உதாரணமாக ஒரு பாடசாலை என்றால் அதில் இயங்கும் மாணவர்கள் குழு, ஆசிரியர்கள் குழு, பெற்றோர்கள் குழு என அனைத்தையும் கம்யூனிட்டிஸ் மூலம் இணைக்கலாம்.
இதற்கென உள்ள பிரத்யேக டேப் மூலம் பயனர்கள் கம்யூனிட்டிஸ்களை உருவாக்கலாம். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குழுக்கள் மற்றும் புதிதாக குழுக்களை உருவாக்கியும் இதில் சேர்க்கலாம்.
இது தவிர வட்ஸ்அப்பில் சட் மூலம் வாக்கெடுப்பு நடத்தும் அம்சம், 32 நபர்கள் வரையில் வட்ஸ்அப் வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் அம்சம் மற்றும் 1024 நபர்கள் வரையில் ஒரே வட்ஸ்அப் குழுக்களில் இயங்கும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.