முள்ளிவாய்க்காலில்இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல்ப்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல கூறியுள்ள கருத்து கண்மூடித்தனமானது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று (27) வன்னேரிக்குளம் ஐயனார் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னேரிக்குளம் வட்டாரக்கிளைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அறவழிப் போராட்டம் ஒன்றின் எல்லா நியாயங்களையும் அடியோடு ஒதுக்கிவிட்டு, இந்த நாட்டின் சுதேசிய இனமொன்றின் மீது சிங்கள பேரினவாதம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் நேரடியாக முகம்கொடுத்து, கொடிய போரொன்றின் முழுமையான தாக்கங்களை எதிர்கொண்ட எங்கள் மக்களுக்குத்தான் அந்தப் போரின் வலியும், அது தந்த இழப்புக்களின் வலியும் தெரியும்.
குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர்களைக்கூட பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்ற எந்தப் பாகுபாடுமற்று பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் கோயில்களில் தஞ்சமடைய வைத்து கொத்துக்குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் வீசி எங்கள் மக்களை கொத்தாகக் கொன்றொழித்ததை இனப்படுகொலை என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்லமுடியும்?.
இறுதிப்போரின்போது எவரும் காணாமற்போகவில்லை என்று சொல்லியிருக்கும் ஓ.எம்.பியின் தலைவர், தங்கள் கைகளால் இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகளை மீட்டுத்தரக்கூறி இன்றைக்கு இரண்டாயிரம் நாட்களைக் கடந்தும், தெருத்தெருவாக நின்று போராடும் தாய்மாருக்கும், அவர்களின் கண்ணீருக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்?
தனது அரசதரப்பு விசுவாசத்தைக் காட்டுவதற்காக, ஒடுக்கப்பட்ட இனமொன்றின் உணர்வுகளோடு விளையாடுவதை மகேஷ் கட்டுண்டல போன்ற இனவாதிகள் நிறுத்த வேண்டும். இதே பொய்யைத்தான் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் சொல்லியிருந்தன என்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணரத் தலைப்பட வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.