தேசிய பாதுகாப்பு எனும் போர்வையில் சிறுவர் பூங்காவின் ஊடாக கலாச்சார சீரழிவை இராணுவம் ஏற்படுத்துகிறது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் குற்றச்சாடியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குற்றம் சாடினார்.
மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி நகரில் இராணுவத்தினால் இயக்கப்படும் சிறுவர் பூங்காவில், பல சிறுவர் சிறுமியர் இணைந்து சமூகத்துக்கு தகாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அதனை இராணுவத்தினர் தடுக்காது, பார்த்து ரசித்தும், சிரித்தும் மகிழ்வதை நான் கண்டுள்ளேன். தூர பிரதேசங்களிலிருந்து வரும் பிள்ளைகள் தமது நன்மதிப்பை இழக்கும் நிலை காணப்படுகிறது.
இராணுவம் எமது கலாச்சாரத்தை சீரழிக்கும் எண்ணத்துடன் இவ்வாறு செயற்படுகிறது. இதே வேளை குறித்த பகுதிக்கு அண்மையில் நீதி மன்றம் உள்ளது.
அத்துடன், மிக அண்மையில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமும் உள்ளது. இந்த நிலையில் இவ்வாறான நிலை காணப்படுவதானது கலாச்சார சீர்கேட்டை ஏற்படுத்துவதற்காகவே எனலாம்.
உள்ளுராட்சி சட்டத்தினடிப்படையில், இவ்வாறான பூங்காக்கள் உள்ளுராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும். மாறாக இராணுவம் தமது முகாம்களில் அமைத்து கலாச்சாரத்தை சீரழிக்கின்றது.
உடனடியாக குறித்த பூங்கா பிரதேச சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசாங்க அதிபர் மேற்கொள்ள வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமது இராணுவ முகாமிற்குள் இவ்வாறு பூங்காவை அமைத்துள்ளனர். தேசிய பாதுகாப்பிற்கு எதிராக எம்மால் எந்தவொரு நீதிமன்றிலும் வழக்கு தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.