யாழ்ப்பாணம், தையிட்டியில் மாணவியொருவரிடம் தங்கச்சங்கிலி அறுத்த இராணுவச்சிப்பாய் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
தையிட்டி, வள்ளுவர்புரம் பகுதியில் மாணவியொருவர் வர்த்தக நிலையத்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஒருவர், ஆள் நடமாட்டமற்ற பகுதியில் மாணவியின் தங்கச்சங்கிலியை அறுத்துள்ளார். இதன்போது நடந்த இழுபறியில் மாணவி பாதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் கூக்குரலையடுத்து, அங்கு திரண்ட பிரதேச மக்கள், அந்த நபரை மடக்கிப் பிடித்து, நையப்புடைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பலாலியில் பணியாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பிரதேச மக்கள் அவரை பலாலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த பொலிசாரும், இராணுவத்தினரும் அவர்களை வழிமறித்து, அவரை தம்மிடம் ஒப்படைக்கும்படியும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கமான சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது சிறிய அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் இராணுவச்சிப்பாயை பலாலி பொலிசார் கைது செய்ததுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சட்டநடவடிக்கைக்காக கைப்பற்றினர்.
இலங்கை இராணுவத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் கொல்லங்கலட்டியை சேர்ந்தவரே இவ்வாறு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.