முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வீட்டின் முன் சினிமா நடிகை சாந்தினி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தன்னை தாக்கியதாக கூறி அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவர் மீது சினிமா நடிகை சாந்தினி, போலீசில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். இதனால் கர்ப்பம் அடைந்து அவரது நெருக்கடியால் கர்ப்பத்தை கலைத்துள்ளேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு இப்போது என்னை அவர் ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார், முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தனர்.
இதன்பின்னர் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 351 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு ரத்து இந்த வழக்கு நடைபெற்று வரும் வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாந்தினி தனது புகாரை திரும்ப பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து டாக்டர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில் நேற்று காலை நடிகை சாந்தினி திடீரென்று ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள டாக்டர் மணிகண்டனின் பெற்றோர் வீட்டின் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டின் வாசலில் நின்று கூச்சலிட்டதால் மணிகண்டனின் வீட்டில் இருந்தவர்கள், மணிகண்டன் இங்கே இல்லை. இங்கிருந்து வெளியே செல்லுமாறு கூறினர்.
இதன்பின்னர் சாந்தினி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரின் நலன் கருதி நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தன்மீதான தவறை ஒப்புக்கொண்டு மணிகண்டன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழக்கை திரும்ப பெற்றேன். அதற்கு மறுநாள் முதல் அவர் தலைமறைவாகி விட்டார். நானும், எனது வக்கீல், போலீசார் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் மதுரை வந்தேன். நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அவர் என்னை பார்த்து கார் அருகில் செல்லுமாறும், தான் அங்கு வருவதாகவும் கூறினார். ஆனால், வரவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். உள்ளே இருந்த நிலையில் வீட்டில் இல்லை, பெங்களூரு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
இது அவரின் ஊர் என்பதால் இங்கு வந்தேன். அவரது தாய் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் இங்கு இல்லை என்று கூறி என்னை தாக்கினர். இதில் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. என்னிடம் வழக்கை வாபஸ் பெறும் முன் அளித்த வாக்குறுதிப்படி நடக்க வேண்டும். அதற்கு அவர் முதலில் என்னை சந்திக்க வேண்டும், அதுவரை நான் ஓயமாட்டேன். எனக்கு நீதி வேண்டும் அதுவரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பஜார் காவல் நிலைய போலீசார் அவரை அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நடிகை சாந்தினி காரில் மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். இதன்காரணமாக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் வீட்டின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வராமல், மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நடிகை சாந்தினி சென்றார். காலில் பேண்டேஜ் போடப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரிக்கு வந்த அவருக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தலைசுற்றல் இருப்பதாக அவர் தெரிவித்ததால் டாக்டர்கள் அவரை படுக்கையில் அனுமதித்து குளுக்கோஸ் ஏற்றினார்கள். எக்ஸ்ரே பரிசோதனையில் எலும்பு முறிவு இல்லை என தெரியவந்தது.
அதன் பின்னர் அவர் தன்னுடைய வழக்கு சென்னையில் நடைபெற்று வருவதால் தான் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை பெற்று கொள்வதாக கூறி விட்டு மேலூரில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றார். ச
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் கேட்டபோது, துணை நடிகை சாந்தினி என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் தன்னை சிலர் தவறாக வழி நடத்திவிட்டனர் என்று கூறி கோர்ட்டில் வழக்கை வாபஸ் பெற்றார். அப்போது அவரை நீதிபதி கண்டித்து எச்சரித்து வழக்கை ரத்து செய்தார். சட்டரீதியாக போராடி ஜெயில் வரை சென்று வழக்கில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். மேற்படி நடிகையுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதால், இந்த நிலையை பயன்படுத்தி சிலர் நடிகையை தூண்டி விடுகின்றனர். நான் தவறு செய்யவில்லை என்றார்.