மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.
தீவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த அளவிலான வளிமண்டல இடையூறு இன்னும் நீடிக்கிறது. எனவே, தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.