வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஆறு நாட்களின் முன் காணாமல் போயிருந்த கைதியின் இருப்பிடத்தை சிறைச்சாலை அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
கஞ்சா வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, ரூ.2,000 அபராதம் செலுத்தத் தவறியதற்காக ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி, செப்டம்பர் 16 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதே நாள் மாலை காணாமல் போனார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் உத்தரவின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
கைதி தங்கள் பிடியில் இருந்து எப்படி தப்பிக்க எப்படி தப்பித்தார் என்பது குறித்து சிறைத்துறையினரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
சந்தேக நபர், 36 வயதான மீபகே சங்கா, மாளிகாவத்தை மற்றும் நாத்தாண்டிய பிரதேசத்தில் வசித்து வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கைதியின் விபரங்களை பொரளை, மாலம்பே, மாரவில உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கும், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் வெலிக்கடை சிறைச்சாலை அறிவித்துள்ளது.
அன்றைய தினம் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களின் கவனக்குறைவால் சிறைச்சாலையில் இருந்து இந்த கைதி தப்பியோடியிருந்தால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.