புகையிரத திணைக்களம் கடந்த வருடம் ஈட்டிய 2,600 மில்லியன் ரூபா வருமானத்தில், அதன் ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக ரூபா 2,300 மில்லியன் செலுத்த வேண்டியிருந்ததாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பள கொடுப்பனவுகளுக்காக, புகையிரத திணைக்களம் 7,000 மில்லியன் ரூபா செலுத்தியதாகவும், புகையிரதக் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“புகையிரத துறையின் வருமானம் ரூ. 2.6 பில்லியன். திணைக்களத்தின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்கு ரூ. 2.3 பில்லியன் செலவிடப்பட்டது. சம்பளத்திற்கு ரூ.7 பில்லியன் ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட அமைப்பை நாம் எப்படி பராமரிக்க முடியும்? அதனால்தான் கட்டணத்தை உயர்த்தினோம். வருவாய்க்கு ஏற்ப செலவினங்களை நிர்வகிக்க முடியாவிட்டால், குழப்பத்தில்தான் இருக்கிறோம். வரி வருவாயில் 80 சதவீதத்தை சம்பளமாக செலுத்தும் ஒரே நாடு இலங்கைதான்” என சுட்டிக்காட்டினார்.