முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை நாளை அளவிடும் நடவடிக்கையை கைவிடும்படி, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலமான குருந்தூர் மலையில், பௌத்த வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குருந்தூர் மலையை சூழவுள்ள தண்ணிமுறிப்பு மக்களின் வயல் நிலங்கள் 341 ஏக்கர்களையும் சுவீகரிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
அந்த வயல் நிலங்களில் எல்லைக்கல்லிடப்பட்டுள்ளது. நாளை (21) நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீடு செய்யவிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அந்த பகுதிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.
குருந்தூர் மலை தொடர்பான ஆவண விளக்கங்கள் அடங்கிய கடிதத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன் ஆகியோர், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை சந்தித்தனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதை நிறுத்துமாறும், நாளைய நில அளவை திட்டத்தை கைவிடுமாறும் சாள்ஸ் நிர்மலநாதன் கேட்டுக் கொண்டார்.
நிலஅளவை திட்டத்தை தான் அறிந்திருக்கவில்லையென குறிப்பிட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சாள்ஸ் நிர்மலநாதனின் தொலைபேசியிலேயே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை தொடர்பு கொண்டார். (அமைச்சர் கையடக்க தொலைபேசி இல்லாமலேயே சந்திப்பிற்கு வந்திருந்தார்)
நிலஅளவை திட்டம் தொடர்பில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் கேட்டறிந்த அமைச்சர், நாளைய நில அளவை திட்டத்தை உடனடியாக கைவிடும்படி அறிவித்தார்.
அத்துடன், குருந்தூர் மலை தொடர்பான தற்போதைய நிலவர அறிக்கையை 2 நாட்களிற்குள் சமர்ப்பிக்கும்படியும், குருந்தூர் மலை தொடர்பில் தனது உத்தரவு வரும் வரை மேலதிகமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்தார்.
இதேவேளை, நாளைய நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு நில அளவீட்டு திணைக்களத்தினருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.