சீதுவ, நந்தாராம விகாரையின் பிரதமகுரு அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விகாரை வளாகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் சந்தேகமடைந்து அந்த பகுதியில் தேடுதல் நடத்திய போது, பிக்கு தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, அங்கியால் மூடப்பட்டிருந்த பிக்குவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது முகம், கைகள் கட்டப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது. அவரது முகத்தில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
இறக்கும் போது 55 வயதான அவர் கட்டான கல்வி வலயத்தில் ஆசிரியர் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
18 வயதுடைய பிக்குவும் விகாரையில் தங்கியிருந்தார், அவர் செவ்வாய்க்கிழமை விகாரை வளாகத்தில் காணப்பட்டுள்ளார். எனினும் குறித்த பிக்கு நேற்று காலை முதல் விகாரையில் காணப்படவில்லை. பிக்கு தனது தனிப்பட்ட பொருட்களையும் எடுத்துக்கொண்டு விகாரையில் இருந்து வெளியேறியதை பொலிசார் அவதானித்துள்ளனர்.
விகாரையின் உரிமை தொடர்பாக இரண்டு பிக்குகளுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இந்த தகராறு தொடர்பாக இரு பிக்குகளும் அவ்வப்போது பொலிஸில் முறைப்பாடு செய்து வந்த நிலையில், இந்த தகராறு காரணமாக இந்த பிக்கு இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விகாரையில் இருந்த கார் உள்ளிட்ட சொத்துக்களும் காணாமல் போய்விட்டன. சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.