ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை சுலமாக வீழ்த்தி, இலங்கை தனது ‘முரட்டு ஃபோர்மை’ தொடர்ந்தது.
நேற்று டுபாயில் நடந்த போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் பந்து வீச்சு மீண்டுமொரு முறை கட்டுக்கோப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக வனிந்து ஹசரங்கவின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் பாகிஸ்தான் சிரமப்பட்டது. ஹசரங்கவின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் அவ்வளவாக எதிர்கொண்டிருக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆரம்ப ஓவர்களில் இருந்து இலங்கை கட்டுப்பாடாகவே பந்து வீசியது. பவர்பிளேயில் இலங்கையின் இறுக்கமான பந்துவீச்சினால் பாகிஸ்தானினால் எதிர்பார்த்தபடி அடித்தாட முடியவில்லை. முதல் ஐந்து ஓவர்களில் துடுப்பாட்டத்தில் ஒரு பவுண்டரியை மட்டுமே பாகிஸ்தான் அடிக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் பிரமோத் மதுஷன் (அறிமுகத்தில்) மற்றும் தில்ஷன் மதுஷங்கவின் பந்துவீச்சில் பெரியளவில் மேம்பாடு தெரிந்தது.
அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர்களான ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரும் நடுப்பகுதியில் கட்டுப்பாட்டை தொடர்ந்தனர். 5.5 முதல் 14.3 வரையிலான பந்துகளில் (53 பந்துகள்) பாகிஸ்தான் ஒரு பவுண்டரியும் அடிக்கவில்லை. பாகிஸ்தான் கடைசி 9 விக்கெட்டுகளை 58 ரன்களுக்கு இழந்தது.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் 21 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
முதல் ஓவரின் 2வது பந்திலேயே குசல் மென்டிஸ் டக் அவுட்டாகினார். அடுத்த ஓவரில் தனுஷ்க குணதிலக டக் அவுட்டாகினார். இலங்கை அணி 29 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்கள் என ஒரு கட்டத்தில் தடுமாறியது. எனினும், இலக்கு சிறிது என்பதால், தடுமாற்றமின்றி வெற்றி பெற்றது.
ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்தலும், பதும் நிஸங்க நிதானமாக ஆடி அரைச்சதமடித்தார். 48 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ரி 20 போட்டிகளில் அவரது 7வது அரைச்சதம்.
பந்துவீச்சில் ரவூப் 19 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்கள், ஹஸ்னைன் 21 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் வனிந்து ஹசரங்க.
இதேவேளை, நேற்றைய இலங்கையின் வெற்றி, டுபாய் மைதானத்தில் கடந்த 20 ரி 20 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணி பெற்ற 17வது வெற்றியாகும்.
நாளை இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.