பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைச் சபையின் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
குழுவின் தலைவர் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் அடங்கிய குழுவிடம் இதனை கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, அமைச்சர் ராஜபக்ஷ, ஆலோசனைக் குழுவின் பணியை விரைவில் முடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களுடன் விரிவான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.
“ புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று கைதிகள் தொடர்பான விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி இந்தக் குழுவை நியமித்தார். நான் அவர்களுடன் பேசினேன், அதன் செயல்முறையை விரைவுபடுத்தவும், அதன் பணியை விரைவில் முடிக்கவும் கேட்டுக் கொண்டேன், ”என்று விஜயதாஷ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
“புலம்பெயர்ந்து வாழும் மக்களுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அவர்களும் விவாதங்களில் திருப்தி அடைந்துள்ளனர். வெளிநாடுகளில் சந்திக்காமல் யாழ்ப்பாணத்திலேயே இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கூட்டங்களை நடத்துமாறு அவர்களை அழைத்தேன். எங்கள் பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். தற்போது கட்சிகளுக்கு இடையே நம்பிக்கை மற்றும் நல்லுறவை வளர்ப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.