அரசாங்கம் அறிவித்த விலைச்சூத்திரத்தின் படி செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று (1) மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று எரிபொருள் விலை திருத்தம் இடம்பெற வேண்டும்.
எனினும், ஓகஸ்ட் 15ம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைவடைந்த போதும், அப்போது விலை குகக்கப்படவில்லை.
இதையடுத்து, அடிக்கடி விலையேற்றுவதற்காக மட்டுமே விலைச்சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்டதா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டது.
ஓகஸ்ட் 1ஆம் திகதி டீசல் விலை மட்டும் ரூ.10 குறைக்கப்பட்டது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை, எரிபொருள் இறக்குமதி செலவு, இறங்கும் செலவு, விநியோக செலவு, வரி போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர், நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது.