ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும உட்பட 13 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளனர்.
இன்று காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ், தாம் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு எதிர்க்கட்சி ஆசனங்களில் அமரவுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சன்ன ஜயசுமன, சரித ஹேரத், நாலக கொடஹேவ, குணபால ரத்னசேகர, திலக் ராஜபக்ஷ, உபுல் கலபதி, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ்.குமாரசிறி, லலித் எல்லாவல மற்றும் உதயன கிரிந்திகொட ஆகியோர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை கருத்திற்கொண்டு பலமான அரசியல் சக்தியொன்றை ஸ்தாபிப்பது காலத்தின் தேவை என அவர்கள் கருதுவதாக தெரிவித்தார்.
வாக்காளர்கள் எதிர்பார்ப்பது அதுவே என்றும், சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் இயங்குவதாகவும் எம்.பி பீரிஸ் தெரிவித்தார்.
சமூக ஒப்பந்தம் அனைத்து 225 எம்.பி.க்களுக்கும் அவர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் இடையே உள்ளது என்றார்.
தற்போது சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிளவு காணப்படுவதாகவும், நிலைமையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
மேலும், தேர்தல்கள் ஜனநாயக சமூகத்தின் முக்கிய அங்கம் என எம்.பி பீரிஸ் தெரிவித்தார்.
பொது ஆணைக்கு பயந்து தேர்தலை நடத்தாத நாட்டை ஜனநாயகம் என்று அழைக்க முடியாது என்றார்.
தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் எப்போதுமே இடைக்கால அரசாங்கமாகவே கருதப்படுவதாகவும், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் விதிகளின்படி, மேலாதிக்கம் பொதுமக்களுக்கு சொந்தமானது, அரசாங்கத்திற்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ அல்ல.
நாட்டில் பொதுமக்களின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரே வழி வாக்களிக்கும் அதிகாரம் மட்டுமே என பாராளுமன்ற உறுப்பினர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தனிநபரின் ஆதாயத்திற்காகவும் பொதுமக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்றும், பொது மக்கள் விரும்பும் ஒரு அரச தலைவரையும் பாராளுமன்றத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமை பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்கள் எவ்வாறு ஒத்திவைக்கப்பட்டதோ அதேபோன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் தாமதப்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக எம்.பி. பீரிஸ் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் முன்னைய அரசாங்கத்தின் சூழ்ச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துடன் இணைந்து கோரியதாகவும், இந்த நடவடிக்கையால் குறிப்பிட்ட சில வாக்காளர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்று கூறினார்.
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற தந்திரங்களை வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம், அவ்வாறு செய்தால் மீண்டும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.
எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு சுயேச்சை எம்.பி.க்களாக செயற்பட்டு எதிர்க்கட்சி ஆசனங்களில் அமருவதற்கு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.