மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது 95வது பிறந்ததின நிகழ்வு இன்று காலை 9மணியளவில் சுழிபுரத்திலுள்ள வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு முன்னாலுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியல்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா “இலங்கை அரசியல்,பொருளாதார நெருக்கடிகளும் தமிழர் கல்வியும்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.
மேலும், பொன்னாலை சந்திரபரத கலாலய மாணவிகளின் “எம் தேசத்தின் நாளைய சொத்து” என்கிற புத்தாக்க நாட்டிய ஆற்றுகை இடம்பெற்றதுடன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் சகோதரர் அப்பாப்பிள்ளை வாசுதேவலிங்கம் பொன்னாடை போர்த்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலச்சந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.