தன்னை ’தாய்க்கிழவி’ என்று அழைக்க வேண்டாம் என நடிகை நித்யா மேனன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான படம், ’திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடலைப் பார்த்துவிட்டு, ’தாய்க்கிழவி’ என்று சமூக வலைதளங்களில் நித்யா மேனனை அழைத்து வருகின்றனர். இது தனக்குப் பிடிக்கவில்லை என்று நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தின் நேரலையில் தோன்றிய அவர், ரசிகர்கள் யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்றும் அதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.