“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்குபற்றிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது வழக்கு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மோதர பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸை 500,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் இருவேறு சம்பவங்கள் தொடர்பில் கோட்டை காவல்துறை மற்றும் கொம்பனித்தெரு காவல்துறை ஆகியன தனித்தனியான பி அறிக்கைகளையும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மீது தாக்கல் செய்திருந்தன.
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி ஜீவந்த பீரிஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சார்பில் முன்னிலையாகியிருந்தனர்.