கட்டணம் என்ற பெயரில் கார்ப்பரேட் கல்லூரிகளின் சுரண்டலை வெளிப்படுத்தும் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
முந்தைய தலைமையாசிரியர் வழங்கிய கட்டணச் சலுகை செல்லாது என்றும், தேர்ச்சி ஆவணங்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் (டிசி) பெறுவதற்கு நிலுவைத் தொகையான ரூ.16 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தற்போதைய முதல்வர் ஒரு மாணவருக்கு அழுத்தம் கொடுத்தார்.
இத்தொகையை செலுத்த முடியாத நிலையில் மாணவன், மாணவர் சங்க தலைவர்களிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை. இதையடுத்து, அந்த கல்லூரிக்கு சென்ற மாணவர் தலைவர் ஒருவர் எவ்வளவோ கெஞ்சியும் முதல்வர் கேட்காததால், தன் மீது பெட்ரோல் ஊற்றி ஊற்றிக்கொண்டார். அதே சமயம் அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்கு மீதும் பெட்ரோல் விழுந்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் மாணவர் தலைவர்கள் இருவரும், கல்லூரி ஊழியர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து ஆம்பர்பேட்டை காவல் ஆய்வாளர் பிரபாகர் கூறிய முழுமையான விவரம் வருமாறு-
ஐதராபாத் அடுத்த ஆம்பர்பேட்டை-ராமானந்தபூர் பிரதான சாலையில் உள்ளது நாராயண ஜூனியர் கல்லூரி. மல்காஜிகிரி வெங்கட் ரெட்டிநகரை சேர்ந்த சாய் நாராயணா இங்கு இன்டர் எம்பிசி படித்து வந்தார்.
சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கல்லூரிக்கு சென்ற சாய், இடைநிலை தேர்ச்சி ஆவணங்கள் மற்றும் டிசி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்னும் ரூ.16 ஆயிரம் கட்டணம் பாக்கி உள்ளதாக கூறிய கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டி, அந்த தொகையை செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்குவோம் என்றார்.
ஆனால் முன்னாள் அதிபர் ராதாகிருஷ்ணா ரூ.16 ஆயிரம் சலுகை அளித்ததாக கூறிய சாய், ஏதாவது பிரச்சினை வந்தால் தன்னை தொடர்பு கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு முன்னைய அதிபர் குறிப்பட்டதாக கூறினார்.
சாயின் வார்த்தைகளை அலட்சியப்படுத்திய அதிபர் சுதாகர், முந்தைய அதிபர் அளித்த சலுகை தற்போது செல்லாது, ரூ.16 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கூறிவிட்டார்.
இருப்பினும், சாய் சுமார் 15 நாட்கள் கல்லூரிககுச் சென்று முதல்வர் மற்றும் மற்றவர்களை சந்தித்து, தனது வறுமையை குறிப்பிட்டு, சான்றிதழ்களை வழங்குமாறு கெஞ்சினார். ஆனால், முதல்வர் மனமிரங்கவில்லை.
இதையடுத்து தனக்கு உதவுமாறு மாணவர் சங்க தலைவர்கள் வெங்கடாச்சாரி மற்றும் சந்தீப் ஆகியோரை சாய் கேட்டுக் கொண்டார்.
இவர்கள் வெள்ளிக்கிழமை வேறு சில மாணவர்களுடன் நாராயணா கல்லூரிக்கு வந்தனர். சாயின் விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் செவிசாய்க்கவில்லை. நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என மீண்டும் வலியுறுத்தினார்.
மாணவத் தலைவர் சந்தீப் பொறுமையிழந்து, ‘எங்களை இங்கேயே சாகச் செய்யப் போகிறாயா?’ என முதல்வரிடம் எகிறினார்.
இந்நிலையில், கல்லூரி அலுவலகத்தில் உள்ள முதல்வர் அறையில் சந்தீப் உள்ளிட்டோர், முதல்வர் சுதாகர் மற்றும் நிர்வாக அலுவலர் அசோக் ரெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வளவோ சொல்லியும் அவர்கள் சான்றிதழ் தர தயாராக இருக்கவில்லை.
சந்தீப் ஏற்கனவே கொண்டு வந்த பெட்ரோல் போத்தலை எடுத்து தன் மீது ஊற்றினார். சந்தீப் தன் மீது பெற்றோல் ஊற்றிய போது, அசோக் ரெட்டி, மற்றொரு மாணவர் தலைவர் வெங்கடாச்சாரி ஆகியோர் மீதும் பெற்றோல் விழுந்தது. அத்துடன், எதிரே வைக்கப்பட்டிருந்த சுவாமி பட விளக்கிலும் பட்டு, தீ மளமளவென பரவியது.
சந்தீப் தீப்பற்றியதும், அதிபர் சுதாகர் ரெட்டியை கட்டியணைக்க முயன்றார். என்றாலும், சுதாகர் ரெட்டி சிறு காயங்களுடன் தப்பித்து விட்டார்
தலைமையாசிரியர் அறையில் இருந்து கடும் புகை வருவதைக் கண்டு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.
தீ விபத்தில் சந்தீப், வெங்கடாசாரி, அசோக் ரெட்டி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அதிபருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் முதலில் காந்தி மருத்துவமனைக்கும், அங்கிருந்து யசோதா மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தீப் மேல் சிகிச்சைக்காக டிஆர்டிஓ அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சந்தீப்புக்கு 65 சதவீத தீக்காயங்களும், அசோக்கிற்கு 50 சதவீதமும், வெங்கடாச்சாரிக்கு 30 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.