மன்னார் தலைமன்னார் பகுதியில் நிவாரண பொருட்களை பெற உரித்தான தகுதியை பூர்த்தி செய்யாத குடும்பம் ஒன்றிற்கு நிவாரண பொருள் வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கிராமம் மேற்கு கிராம சேகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் நிவாரண பொருள் பெறுவதற்கு என 10,000 ரூபா லஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார்.
இந்திய அரசினால் பின் தங்கிய குடும்பங்களுக்கு என வழங்கப்பட்ட அரசி பகிர்தலின் போது குறித்த நிவாரணம் பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு உட்படாத குடும்பங்களுக்கு கிராம சேவகரினால் அரசி வழங்கப்படவில்லை.
அந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவே இலஞ்சப்பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதேவேளை, குறித்த நிவாரண பொருள் கிடைக்காத குடும்பம் ஒன்று கிராம சேவகரை பழி தீர்க்கும் விதமாக தனது தம்பியின் மனைவியை பயன்படுத்தி கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் நிவாரணத்தை பெறுவதற்கு கிராம சேவகர் 10.000 ரூபா இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஆணைக்குழுவில் முறையிட்டு கிராம சேவகரில் மேசையின் கீழ் பணத்தை வைத்து விட்டு கிராம சேவகரை கைது செய்ய வைத்துள்ளதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அந்த பகுதி கிராம மக்கள் நேற்று (18) கிராம சேவகரை கைது செய்து கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கிராம சேவகர் கைது செய்யப்பட்டு நேற்று இரவு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தனக்கு இவ் வழக்கில் பிணை வழங்க முடியாத காரணத்தினால் கொழும்பு நீதிமன்றத்தில் 24 திகதி குறித்த கிராம சேவகரை முன்னிலைபடுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பில் பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,
டி கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கும் நிவாரண பொருள் மாதத்திற்கு இரண்டாயிரம் ரூபா வீதம் 10 மாதங்களுக்கு 20000 ரூபா ஆகும். குறித்த நிவாரணம் மாதம் மாதம் வழங்கப்படும்.
இவ்வாறு 10 மாதங்கள் பெறும் நிவாரணத்திற்கு 10,000 இலஞ்சமாக யாரும் வழங்குவார்களா ? அல்லது 10000 லஞ்சம் கோருவார்களா? என கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் முறைப்பாட்டு தரப்பினர் முன்னரும் வேறு சில இதே போன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டனர், அந்த வகையில் கிராமசேவகரையும் சிக்க வைத்துள்ளனர் எனக்குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பெண்ணின் வீட்டை நேற்றைய தினம் மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.